தமிழக செய்திகள்

எனக்கு நண்டை கண்டு எந்த பயமும் கிடையாது அமைச்சர் ஜெயக்குமார் பேச்சால் அவையில் ருசிகரம்

சிங்கம், புலி, கரடி, பூரான் என எல்லாவற்றையும் பார்த்தவன் நான், எனக்கு நண்டை கண்டும் பயம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

தினத்தந்தி

சென்னை,

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நட்ராஜ் (மயிலாப்பூர்), பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பு காரணமாக வீடுகள் இடிந்தன. இதற்கு பதிலாக மாற்று இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

ஜெயக்குமார்:- பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்.எல்.ஏ.க்களும் பார்வையிட்டனர். நானும் பார்வையிட்டேன். வீடுகளை இழந்த மீனவர்களுக்கு பெரும்பாக்கம் பகுதியில் மாற்று இடம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் என் வீட்டு முன்பு ஒரு பெண் ஒருவர் நண்டு விடும் போராட்டத்தை நடத்தி இருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்தி கொள்ளவேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளங்கள் மூலம் இதுபோன்று தகவல்களை பரப்பிவிட்டு தன்னை சமூக ஆர்வலர் போல காட்டிக்கொள்ள நடத்தப்பட்டுள்ளது. எனக்கு நண்டை கண்டு எந்த பயமும் கிடையாது. சிங்கம், புலி, கரடி, பூரான் என எல்லாத்தையும் பார்த்தவன். அண்ணாநகருக்கும், பட்டினப்பாக்கத்திற்கும் என்ன சம்பந்தம்?. இதை யாரோ தூண்டி விடுகிறார்கள்.

அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு குறிப்பிட்டதும் தி.மு.க. உறுப்பினர்கள் சிரித்தப்படி இருந்தனர். இந்த நேரத்தில் தி.மு.க. உறுப்பினர் கே.பி.பி.சாமி எழுந்து ஏதோ சில வார்த்தைகளை தெரிவித்தார். அவருக்கு மைக் தரப்படவில்லை.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே 2 ஆண்டுகள் வனத்துறை அமைச்சராக இருந்தவர், காடுகளில் சிங்கம், புலி, கரடி என அனைத்தையும் பார்த்தவர்.

இந்தநேரத்தில் தி.மு.க. உறுப்பினர் கே.பி.பி.சாமி மீண்டும் சில கருத்துகளை தெரிவித்தார். உடனே ஜெயக்குமார் அதற்கு ஒரு கருத்தை தெரிவித்தார். ஜெயக்குமார் தெரிவித்த அந்த கருத்தை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இதையடுத்து அமைச்சர் பேசிய கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு