மங்கலம்பேட்டை,
சிதம்பரம் மணலூர் லால்புரத்தை சேர்ந்தவர் பாலமுரளி கிருஷ்ணன் (வயது 49). இவர் சிதம்பரம் அரசு போக்குவரத்து கழகத்தில் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது காரில் குடும்பத்துடன் உளுந்தூர்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் மீண்டும் அதே காரில் ஊருக்கு புறப்பட்டார். மங்கலம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னாள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த உளுந்தூர்பேட்டை அடுத்த பில்லூர் கிராமத்தை சேர்ந்த மெக்கானிக் வெங்கடேஷ் பிரபு (48), பாலமுரளி கிருஷ்ணனின் காருக்கு வழிவிடாமல் சென்றுள்ளார். இதை பாலமுரளி கிருஷ்ணன் தட்டிக்கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் பிரபு, பாலமுரளி கிருஷ்ணனை ஆபாசமாக திட்டி கையால் காரின் முன்பக்க கண்ணாடி மற்றும் வலது பக்க கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷ் பிரபுவை கைது செய்தனர்.