சென்னை,
தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகார ரத்து விவகாரம் தொடர்பாக இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்திடம் உரிய முறையீடு செய்து, மீண்டும் அங்கீகாரம் கிடைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் கனவு கல்லூரியான சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை இளநிலை மருத்துவ கல்வி வாரியம் ரத்து செய்துள்ளதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதனால், சுமார் 500 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் கேள்விக்குறியாகி உள்ளது.
பயோ மெட்ரிக் மாணவர் வருகைப்பதிவேடு, சி.சி.டி.வி. கேமரா ஆகியவற்றில் உள்ள விதிமீறல்களைச் சுட்டிக்காட்டியதோடு அதற்கு தமிழ்நாடு மருத்துவ இயக்குநரகம் சார்பில் அளிக்கப்பட்ட பதில் திருப்திகரமாக இல்லாததால் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் இக்கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்னும் சில நாட்களில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், சிறிய குறைகளைக் கூட சரி செய்ய முடியாத அளவுக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை அலட்சியமாக செயல்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
இச்சூழலில், மாணவர்களின் நலன் கருதி முதல்-அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு குறைகளை உடனடியாக சரிசெய்வதுடன் இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்திடம் உரிய முறையீடு செய்து, மீண்டும் அங்கீகாரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்."
இவ்வாறு டி.டி.வி. தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
TTV Dhinakaran (@TTVDhinakaran) May 27, 2023 ">Also Read: