சென்னை,
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராம பகுதியில் இன்று(வியாழன்) தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இத்திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஓசூர் சென்றடைந்தார். அங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்த பின்னர், இன்று காலை 9.30 மணிக்கு ஓசூரில் இருந்து சூளகிரி புறப்பட்டு செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தொடக்க விழாவையொட்டி சில வீடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மருந்து மாத்திரைகள் வழங்குகிறார். முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுவதையும் அவர் பார்வையிடுகிறார்.
மேலும் தனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெட்டமுலாயம் என்ற மலை கிராமத்தில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில், அந்த கிராமத்துக்கு இலவச ஆம்புலன்சையும் வழங்குகிறார். இதுதவிர ஒரு காலை இழந்த இரண்டு பேருக்கு தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரியால் செயல்படும் செயற்கை கால்களையும் வழங்குகிறார்.
சூளகிரி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து காரில் ஓசூர் விமான நிலையம் செல்கிறார். காலை 11 மணிக்கு ஓசூரில் இருந்து சென்னை புறப்படுகிறார். முதல்வர் வருகையையொட்டி ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.