சென்னை,
இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குனர் கே.நடராஜன், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அப்போது அவர், இந்திய கடலோர காவல்படையின் பல்வேறு செயல்பாடுகள், சமீபத்திய சாதனைகள் குறித்து கவர்னரிடம் எடுத்து கூறினார். கடலோர பாதுகாப்பில் சமீபகாலமாக இருந்துவரும் சவால்கள் குறித்தும், இந்திய எல்லையில் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருவது குறித்தும் எடுத்துரைத்தார். கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்திவருவதாகவும் கூறினார்.
மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயல்பட்டுவரும் இந்திய கடலோர காவல்படையின் செயல்பாடுகளுக்கு கவர்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட தகவல் மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.