திருச்சி,
தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 3-வதுகட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நேற்று 20 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இந்த முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த தடுப்பூசி மையங்கள் பலவற்றில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 லட்சத்து 90 ஆயிரத்து 814 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 9 லட்சத்து 95 ஆயிரம் பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் நேற்று ஊரக பகுதிகளில் 353 இடங்களிலும், மாநகராட்சி பகுதியான நகர்ப்புற பகுதிகளில் 162 இடங்களிலும் என மொத்தம் 515 இடங்களில் கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.
இரவு 7 மணிவரை நடந்த முகாம் மூலம் மாவட்டத்தில் 1,06,156 பேருக்கு முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநில அளவில் ஒரே நாளில் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களில், திருச்சி மாவட்டம் 2-வது இடத்தை பிடித்துள்ளதாக கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.