தமிழக செய்திகள்

சட்டப்பேரவை கண்ணியத்தை காக்கும் வகையில் உறுப்பினர்கள் பேச வேண்டும் - ஜேசிடி பிரபாகர் அறிவுரை

உறுப்பினர்கள் பேசும்போதே அவைக் குறிப்பில் இடம்பெறாத வகையிலான கருத்துகளை தவிர்க்க வேண்டும்.

சென்னை:

சட்டப்பேரவையில் தெரிவிக்கப்படும் கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் அளவுக்கு இல்லாமல், அவையின் கண்ணியத்தையும் மாண்பையும் காக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தினார். இது குறித்து சட்டப்பேரவையில் அவர் கூறியதாவது:-

அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக கடந்த வாரம் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், திண்டுக்கல்லில் தனியார் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, அரசியல் கட்சிகளுடன் தொடர்பில்லாத இளைஞர்கள் சிலர் தன்னை சந்தித்ததாக சபாநாயகர் தெரிவித்தார். அரசியல் குறித்து அறிந்துகொண்டு, அதில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த இளைஞர்கள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

தவிர்க்க வேண்டும்...

அப்போது, சட்டப்பேரவையில் இருந்து நீக்கப்படும் அளவுக்கு ஏன் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றும், உறுப்பினர்கள் பேசும்போதே அவைக் குறிப்பில் இடம்பெறாத வகையிலான கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த இளைஞர்கள் தன்னிடம் கூறியதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் பேசும் உறுப்பினர்கள் தங்களை கட்டுப்படுத்தி, முறையாகவும் நெறிமுறையுடனும் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். அவையின் கண்ணியம், உறுப்பினர்களின் கௌரவம் மற்றும் வாக்காளர்களின் மதிப்பு ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் பேச்சு இருக்க வேண்டும்.

விரிவான முடிவு

அவ்வாறு செயல்பட்டால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாது. அதையும் மீறி அவையின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பாடுகள் இருந்தால், அவற்றை வெளிக்கொண்டு வருவதில் தவறில்லை என மக்கள் கருதுகின்றனர். எனவே, இந்த விவகாரம் குறித்து அனைத்து உறுப்பினர்களிடமும் ஆலோசனை நடத்தி விரிவான முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT