தமிழக செய்திகள்

3-ம் ஆண்டு நினைவுதினம்: ஜெயலலிதா சமாதியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி

ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அவரது சமாதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 3-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அவருடைய சமாதியில் இரட்டை இலை வடிவில் பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, டாக்டர் விஜயபாஸ்கர் உள்பட அமைச்சர்களும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க.வின் பல்வேறு அணியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்களும் சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி அருகில் இருந்து அமைதி ஊர்வலமாக வந்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பெரும்பாலான அமைச்சர்கள் கருப்புச்சட்டையுடன் பேரணியில் பங்கேற்றனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய பேரணி வாலாஜா சாலை, காமராஜர் சாலை வழியாக 10.55 மணியளவில் ஜெயலலிதா நினைவிடத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

ஜெயலலிதா சமாதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் சமாதியில் மண்டியிட்டு உருக்கத்துடன் வணங்கினார். அப்போது அவர் மிகவும் சோகத்துடன் காணப்பட்டார்.

பின்னர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் வரிசையாக அஞ்சலி செலுத்தினர்.

தமிழக சட்டமன்ற சபாநாயகர் ப.தனபால், தனது குடும்பத்தினருடன் வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேய மையத்தின் தலைவருமான சைதை துரைசாமி அதிகாலையிலே ஜெயலலிதா சமாதிக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது கணவர் மாதவனுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் சிவக்குமார், செய்தித்தொடர்பாளர் சந்தானம், மாவட்ட தலைவர் வைகுண்ட ராஜா உள்பட நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது சில பெண்களும், மூதாட்டிகளும் துக்கம் தாளாமல் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

டி.டி.வி.தினகரன் தலைமையில் அ.ம.மு.க.வினரும் தனியாக அமைதி பேரணி நடத்தியதால் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஜெயலலிதாவின் நினைவிடத்தின் உள்ளேயும் தடுப்புவேலிகள் அமைத்து அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த ஆண்டு ஜெயலலிதா நினைவுதினத்தின்போது அவருடைய நினைவை போற்றும் வகையில் வழிநெடுகிலும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. தற்போது பேனர் வைப்பதற்கு ஐகோர்ட்டு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால், நடைபாதைகளில் பேனர்கள் வைக்கப்படவில்லை. சேப்பாக்கம் பறக்கும் ரெயில் நிலைய மேம்பால சுவரில் ஒரு பேனர் மட்டும் தொங்க விடப்பட்டிருந்தது. சுவரொட்டிகள் அதிகளவில் ஒட்டப்பட்டிருந்தது.

ஜெயலலிதா நினைவுநாளையொட்டி சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு பேராசிரியர்கள், பணியாளர்கள், ஆய்வு மாணவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோன்று பல்வேறு இடங்களில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்