தமிழக செய்திகள்

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: கடந்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன - பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் பேச்சு

கடந்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன என்று சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

சென்னை,

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வெள்ளிவிழா கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் வரவேற்றார்.

தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி ஆராய்ச்சி படிப்பை முடித்த 31 பேருக்கு நேரடியாக பட்டங்களை வழங்கினார்.

விழாவில், பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைய தினம் பட்டம் பெறுவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்பது பெருமிதம் அளிக்கிறது. எம்.ஜி.ஆர். ஆட்சி ஏழைகளின் ஆட்சியாக இருந்தது. ஆரோக்கியம், கல்வி மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றில் எம்.ஜி.ஆர். அதிக அக்கறை காட்டினார்.

சிகிச்சை என்பது மருத்துவர்கள், பராமரிப்பாளர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருந்து ஆகியவற்றை உள்ளடக்கியது என்று திருவள்ளுவர் கூறி உள்ளார்.

பல்வேறு இடையூறுக்கு மத்தியில் இந்த 4 தூண்களும் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை வீழ்த்த போராடியதில் முன்னணியில் இருந்ததை மறக்க முடியாது. கொரோனா வைரசை எதிர்த்து போராடிய அனைவரும் மனிதகுலத்தின் கதாநாயகர்கள் ஆவர்.

கடந்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இது 2014-ம் ஆண்டை ஒப்பிடும்போது 50 சதவீதம் அதிகம் ஆகும். மருத்துவ மேற்படிப்புகளின் எண்ணிக்கை 24 ஆயிரம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, 2014-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 80 சதவீதம் அதிகம் ஆகும்.

2014-ம் ஆண்டு 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்தன. கடந்த 6 ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் அளிக்க உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு மருத்துவர்கள் மீதான மரியாதை அதிகரித்து உள்ளது. பல மருத்துவர்கள் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும்போதும் நோயாளிகள், மருத்துவ பணியாளர்களுடன் சகஜமாக பழகுவது இல்லை. நோயாளிகளுடன் சகஜமாக பழகும்போது அவர்கள் விரைவில் குணம் அடைவார்கள்.

மருத்துவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக யோகா, தியானம், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். மக்களுக்கு சேவை செய்வது என்பது இறைவனுக்கு பணிவிடை செய்வது போன்றதாகும் என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறி உள்ளார். இந்த உன்னதமான லட்சியத்துடன் வாழ வாய்ப்பு உள்ளவர்கள் மருத்துவ நிபுணர்கள் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 ஆயிரத்து 858 பேர் விழாவில் கலந்து கொள்ளாமல் அவர்கள் படித்த கல்வி நிறுவனங்கள் மூலம் பட்டங்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் உள்ள 34 அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.