சென்னை,
மறைந்த முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 32-வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவருடைய சமாதி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
எம்.ஜி.ஆரின் சமாதியில் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல அ.தி.மு.க.வின் அவைத் தலைவர் இ.மதுசூதனன், பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், செந்தமிழன் உள்பட நிர்வாகிகளும், தொண்டர்களும் எம்.ஜி.ஆர். சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மனிதநேய மைய தலைவரும், பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான சைதை துரைசாமி,
பழம்பெரும் நடிகை லதா, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் கணவர் மாதவன், தமிழக தலித் கட்சியின் தலைவர் டி.டி.கே.தலித்குடிமகன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தங்களுடைய வீட்டில் உள்ள எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அவருடைய விசுவாசிகளும், அபிமானிகளும் திரண்டு வந்து மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தப்படியும், நனைந்தபடியும் மனம் உருக அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல சென்னையில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடந்தன.