திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் இஸ்லாமிய மத அடையாளங்களுடன் அமைச்சரின் உதவியாளர் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் எந்த மதத்தை சேர்ந்தவர்களும் வழிபாடு செய்யலாம். ஆனால், இந்து மதத்தினர் அல்லாதோர் மாற்று மத அடையாளங்களுடன் கோவில் கொடிமரத்தை தாண்டி உள்ளே நுழையக்கூடாது என கோர்ட்டு உத்தரவு உள்ளது.
மாற்றுமதத்தவர் கோவிலுக்கு சென்று இந்து மதக்கடவுளை தரிசிக்க விரும்பினால், அவர் “அந்த கடவுளின் மீது நம்பிக்கை உள்ளது, இந்து மத வழிபாட்டு முறைகள் மற்றும் கோவில் சம்பிரதாயங்களை பின்பற்றுவேன்” என்று எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்க வேண்டும். அதை ஏற்றுக்கொண்டால் கோவிலுக்குள் அனுமதிக்கலாம். அத்தகைய நபர்களை கோவில் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
இதனிடையே, திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற இந்து மத வழிபாட்டு தலமான அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் வரும் 15ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா தொடங்க உள்ளது. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கோவிலில் செய்யப்படவேண்டிய பாதுகாப்பு, முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு ஆய்வுக்கு வந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உதவியாளர் ஒருவர் இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோவிலுக்குள் நுழைந்தார். மாற்று மத அடையாளங்களுடன் கோவிலுக்குள் அமைச்சரின் உதவியாளர் நுழைந்த நிலையில் இதை கண்டித்து கோவில் நிர்வாகத்தினர் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளை, எதிர்ப்பு தெரிவித்தவர்களை அமைச்சர் ரமேஷ் சமாதானப்படுத்தினார். பின்னர், அமைச்சரின் உதவியாளர் இஸ்லாமிய மத அடையாளமாக அணிந்திருந்த தொப்பியை அகற்றிவிட்டு கோவிலுக்குள் சென்றார். இந்த சம்பவத்தால் அண்ணாமலையார் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.