சென்னை,
மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது சொத்து குவிப்பு புகார் தெரிவித்தார். அவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ராஜபாளையம் அருகே தேவதானத்தில் ரூ.74 லட்சத்துக்கு 35 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார். இந்த நிலத்தின் அசல் மதிப்பு ரூ.6 கோடி ஆகும். இதுதவிர திருத்தங்கல் பகுதியில் ரூ.23.33 லட்சத்துக்கு 2 வீட்டுமனைகளும், ரூ.4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கி உள்ளார்.
இந்த சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.1 கோடிக்கு அதிகமாகும். தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். குறிப்பாக 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை ரூ.7 கோடிக்கு சொத்துகள் வாங்கி உள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தேன். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த மனு கடந்த 2014-ம் ஆண்டு விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 23.5.2011 முதல் 20.4.2013 வரையிலான காலத்தில் அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அதிகாரி, ராஜேந்திரபாலாஜி மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் அவர் மீது, லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியது இல்லை என்று அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையை ஏற்று ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான புகார் மீதான மேல் நடவடிக்கையை கைவிட பொதுத்துறை செயலாளர் 4.2.2014 அன்று உத்தர விட்டார். அதன்படி மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது.
இந்தநிலையில் மீண்டும் அந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டபடி விசாரணை தொடர்பான ஆவணங் களை லஞ்ச ஒழிப்பு இயக்குனர் தாக்கல் செய்தார்.