தமிழக செய்திகள்

கல்லூரி மாணவர்கள் 4,044 பேருக்கு மடிக்கணினிகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

“உலகம் உங்கள் கையில்” எனும் திட்டத்தின் கீழ், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள 27 கல்லூரிகளை சார்ந்த மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. இதன்படி, நீலாங்கரை, ஆர்.கே.கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தின் கீழ், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள 27 கல்லூரிகளை சார்ந்த 4,044 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை இன்று வழங்கினார்.

இதில், அடையாறு மண்டலத்திற்குட்பட்ட அன்னை வேளாங்கண்ணி பெண்கள் கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி மருந்தக கல்லூரி, செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான செயின்ட் லூயிஸ் கல்லூரி, நர்சிங் பள்ளி, துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகிய கல்லூரிகளை சார்ந்த 387 மாணவர்கள், பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட ஜெருசலம் பொறியியல் கல்லூரி, ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சார்ந்த 700 மாணவர்கள் பயனடைந்தனர்.

இதேபோன்று, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட கே.சி.ஜி. தொழில்நுட்ப கல்லூரி, டி.ஜே. தொழில்நுட்ப நிறுவனம், சென்னை அறிவியல் மற்றும் கலை கல்லூரி, செங்கல்பட்டு, ஜேப்பியர் பொறியியல் கல்லூரி, தங்கவேலு பொறியியல் கல்லூரி, மிஸ்ரிமால் நவாஜி முனோத் ஜெயின் பொறியியல் கல்லூரி, சி.எல். பெய்ட் மேத்தா மருந்தக கல்லூரி, மிஸ்ரிமால் நவாஜி முனோத் ஜெயின் கட்டிட கலை பள்ளி, முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராஜீவ் காந்தி சாலை-அறிவியல் மற்றும் மனிதநேய பள்ளி, நர்சிங் பள்ளி, மின் மற்றும் மின்னணுவியல் கல்லூரி, இயந்திரவியல் பள்ளி, முகமது சதக் ஏ.ஜே. மருந்தியல் பள்ளி, மேலாண்மை படிப்புகள் பள்ளி, மருந்தக கல்லூரி, உயிரி மற்றும் வேதியியல் பள்ளி, செயின்ட் ஜோசப் தொழில்நுட்ப நிறுவனம், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, தனராஜ் பெயிட் ஜெயின் கல்லூரிகளை சார்ந்த 2,957 மாணவர்கள் என மொத்தம் 27 கல்லூரிகளை சார்ந்த 4,044 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த் ரமேஷ், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அப்தாப் ரசூல், இ.ஆ.ப., மண்டலக்குழு தலைவர்கள் வி.இ.மதியழகன் (சோழிங்கநல்லூர்), எஸ்.வி. ரவிச்சந்திரன் (பெருங்குடி), மாமன்ற உறுப்பினர்கள், மண்டல அலுவலர்கள், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.