சேலம்,
பட்டமளிப்பு விழா
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரியில் 27-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மருத்துவ பட்டப்படிப்பு முடித்த 108 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-
இளங்கலை மட்டுமின்றி கூடுதல் படிப்புகளையும் தொடர்ச்சியாக படித்தால் தான் மருத்துவத்துறையில் சாதிக்க முடியும். முழுமையாக படித்தால் தான் சமூகத்திற்கு பங்களிப்பு செய்ய முடியும்.
உள்கட்டமைப்பு
உலகில் இனிமேல் கொரோனா போன்ற வைரஸ் கிருமிகளுடன் தான் வாழ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவன நிபுணர் சவுமியா சாமிநாதன் கூறியுள்ளார். கொரோனாவில் இருந்து முழுமையாக விடுபட்டு விட்டோம் என்று சொல்ல முடியாது. இன்னமும் கொரோனா நம்மை துரத்தி கொண்டு தான் இருக்கிறது.
2019-ம் ஆண்டு தொடங்கி கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளுடன் தொடர்ந்து உருமாறி வருகிறது. ஒவ்வொரு மருத்துவக்கல்லூரியிலும் 3-க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்களை வென்ற மாணவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பாராட்ட உள்ளார். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 28 மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
75 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் தற்போது 100 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கூடுதலாக மருத்துவ உள்கட்டமைப்பு, பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
மருத்துவ இடங்கள் அதிகரிப்பு
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிகளவில் அரசு மருத்துவக்கல்லூரிகள் தமிழகத்தில் தான் உள்ளன. 34 தனியார் மருத்துவக்கல்லூரிகளும் உள்ளன. ஆண்டுதோறும் 10,425 டாக்டர்கள் தங்களது மருத்துவ படிப்பை நிறைவு செய்கிறார்கள். சேலம், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கை 100 இடங்களை 250 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், எம்.எம்.சி. மருத்துவக்கல்லூரியிலும் 100 இடங்களை 250 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கேத் லேப் அமைக்கப்படும். ரூ.1 கோடி மதிப்பில் கட்டண படுக்கைகள் பிரிவு தொடங்கப்படும். பிறவியிலேயே இருதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். ரூ.20 லட்சம் மதிப்பில் நவீன உபகரணங்கள் வாங்கப்படும். சேலம் அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் விரைவில் டெலிமெடிசன் பிரிவு தொடங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு, கலெக்டர் கார்மேகம், மருத்துவக்கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி
தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் முககவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அவ்வப்போது கழுவுதல் போன்ற விதிமுறைகள் அமலில் உள்ளன. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வது மற்றும் அரசின் விதிமுறைகளை கடைபிடிப்பதன் மூலமாகவே கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.
தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 95 சதவீதமும், 2-ம் தவணை தடுப்பூசியை 85 சதவீதம் பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். முதல் தவணை கூட செலுத்தாமல் 39 லட்சம் பேரும், 2-ம் தவணை கூட செலுத்தாமல் 1.12 கோடி பேரும் உள்ளனர். எனவே, தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறோம்.
கருத்தரிப்பு சிகிச்சை மையம்
கருமுட்டை விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் அறிக்கை வந்தவுடன் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். செயற்கை முறை கருத்தரிப்பு வணிகமயமாவதை தடுக்கும் வகையில் சென்னை மற்றும் திருச்சியில் செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சை மையம் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.