சென்னை,
உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில், உள்ளாட்சி தேர்தலில் பதவிகள் வழங்குவதில் தி.மு.க. கட்சியினர் கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டி இருந்தனர்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற சோனியா காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தை தி.மு.க. புறக்கணித்தது. இதனை தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலுவும் கூறி இருந்தார்.
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் எங்களுக்கு என்ன நஷ்டம்?, அவர்களுக்கு ஓட்டு வங்கி இல்லை என கூறினார்.
இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் 12 மணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்தார். அவருடன் கே.வீ.தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. தி.மு.க. மற்றும் காங்கிரசுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி பேசினோம். 2021-ம் ஆண்டு தேர்தலிலும் அதற்கு பின்பும் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி தொடரும் என கூறினார்.
இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டணி குறித்த கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிப்பதை தி.மு.க., காங்கிரஸ் இரு கட்சியினருமே தவிர்க்க வேண்டும். ஏதோ ஒரு சில இடங்களில் இருதரப்பிற்கும் ஏற்பட்ட சில நிகழ்வுகளை முன் வைத்து, விரும்பத்தகாத விவாதங்கள் கூடாது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக பால்வள துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,
அட சும்மா இருங்கப்பா..
#ஸ்டாலின் அண்ணாச்சிக்கி
#அழகிரி என்ற பெயர் ஆகவே ஆகாதப்பா....
அது மதுரை என்றாலும் சரி
கடலூர் என்றாலும் சரி... என தெரிவித்து உள்ளார்.