தமிழக செய்திகள்

மகளிருக்கு இன்ப அதிர்ச்சியை மு.க. ஸ்டாலின் வழங்கியிருக்கிறார்: செல்வப்பெருந்தகை வரவேற்பு

மகளிர் தங்களது மாதாந்திர செலவை மேற்கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 17 லட்சத்து 53 ஆயிரம் மாணவ- மாணவியர் பயனடைகிற காலை உணவுத் திட்டம் போன்ற அறிவிக்கப்படாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் முத்திரை திட்டங்களான மகளிர் விடியல் பயணம், தோழி மகளிர் விடுதி, புதுமைப் பெண்கள் திட்டத்தின் மூலம் 4 லட்சத்து 83 ஆயிரம் பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித் தொகை, தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் 3 லட்சத்து 80 ஆயிரத்து 467 கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1000, திறன் பயிற்சியை வளர்க்க நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி, இதுவரை 2 கோடிக்கும் மேல் பயனடைந்த மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், கலைஞர் கைவினைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் என பல்வேறு திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு பயனாளிகளுக்கு போய் சேர்ந்திருக்கிறது. கடுமையான நிதி நெருக்கடியில் ஆட்சியமைத்த தி.மு.க. அரசு இத்தகைய சாதனைகளை படைத்து வருகிறது.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவிகித பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவர கையேடு கூறுகிறது. அதன்படி, ரூபாய் 31.19 லட்சம் கோடி வளர்ச்சி ஏற்பட்டு தனிநபர் வருமானம் ரூபாய் 3.61 லட்சமாக உயர்ந்திருக்கிறது. தேசிய சராசரி வருமானம் ரூபாய் 1.96 லட்சமாகத் தான் இருக்கிறது. மேலும், தமிழக மக்களின் தனிநபர் வருமானம் 1.6 மடங்காக அதிகரித்திருக்கிறது.

2021-25 ஆம் ஆண்டுவரை அன்னிய முதலீடு ஈர்ப்பு ரூபாய் 11 லட்சம் கோடியாக உயர்ந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். முதலீட்டாளர்களின் முகவரியாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்திற்கு அடுத்து இரண்டாவது பெரிய பொருளாதார வளமிக்க மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை ஒதுக்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணித்து வருகிற நிலையில், இத்தகைய சாதனைகளை படைத்து வரும் தமிழ்நாடு முதல்-அமைச்சரை, தமிழ்நாட்டு மக்களே இன்று பாராட்டி மகிழ்கிறார்கள். தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதார வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஏற்படுத்திருக்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுகிற வகையில் ஆட்சி அமைந்தவுடன் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூபாய் 3000, கோடை கால சிறப்பு தொகுப்பாக ரூபாய் 2000 என மொத்தம் ரூபாய் 5000 கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளான 1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு இன்று காலை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. பயனடைந்த மகளிருக்கு இன்ப அதிர்ச்சியை மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கியிருக்கிறார்.

அ.தி.மு.க.வின் தூண்டுதலின் பேரில், இத்திட்டத்தை முடக்குவதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டது. ஆனால், அந்த தடைகளையெல்லாம் தகர்த்து 1 கோடியே 31 லட்சம் மகளிர் தங்களது மாதாந்திர செலவை மேற்கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், மகளிர் சுயசார்புடையவர்களாக குறைந்தபட்ச வருமானத்துடன் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக திட்டமிட்டு செயலாற்றிய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன். தமிழ்நாட்டின் மக்கள் நலன் சார்ந்த அரசு என்பதை முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களின் மூலமாக நாள்தோறும் நிரூபித்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்று வருகிறார். என தெரிவித்துள்ளார்.