ரூ.10 லட்சம் நிவாரண நிதி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அப்போது கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் தொகையை மு.க.ஸ்டாலினிடம் அவர் வழங்கினார். அப்போது திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உடனிருந்தார். அவரும் தனது சார்பில் ரூ.5 லட்சம் வழங்கினார்.
பின்னர் தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு சீமான், பாரதிராஜா ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி வருமாறு:-
இது எங்கள் நாடு. பாரதமே பைந்தமிழரின் நாடுதான். இந்த நாடு முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்ட நாகர்கள். எனவே நாடற்றவர்கள் வந்து இதை அவர்களின் நாடு என்று கூற முடியாது. இந்த நாட்டை நாங்கள் பிரிக்கிறோம் என்றெல்லாம் அவர்கள் சொல்ல முடியாது. இந்தியா, மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் அரசியல் சாசனம் கூறுகிறது. முதல்-அமைச்சரின் செயல்பாடுகள் நன்றாக இருக்கின்றன. அனைத்து துறைகளிலும் வேகமாக இயங்குகிறார்கள். குறிப்பாக மருத்துவத் துறை நன்றாகச் செயல்படுகிறது.
புதிய அரசு பதவியேற்றவுடன் 5 திட்டங்களுக்கான கோப்புகளில் முதல்-அமைச்சர் கையெழுத்திட்டார். அதுவே தமிழகத்தை தாங்கிப்பிடிப்பதற்கான சக்தியாக இருக்கிறது. இந்த வயதில் மிகவும் முதிர்வுடன் தமிழகத்துக்காக சிறப்பாக பணியாற்றுகிறார். பிளஸ்-2 தேர்வை பொறுத்தவரை, தேர்வு நடத்தும்போது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அரசுதான் பொறுப்பேற்க வேண்டி வரும். இந்த விஷயத்தில் அரசு ஆலோசித்து வருவதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்.
ஏழு பேர் விடுதலை பற்றி கோரிக்கை விடுத்துள்ளோம். முதல்-அமைச்சரும் அதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பா.ஜ.க. காலூன்ற முடியாத இடங்களில் பயங்கரவாதம் இருப்பதாக கொண்டு வர முயற்சிக்கிறது. மீனவர்களையும், இலங்கைத் தமிழர்களையும் கொன்று குவித்த சிங்கள அரசை கண்டிக்காத இந்த நாடு எங்களை பயங்கரவாதிகள் என்று கருதுவதை புறந்தள்ளுகிறோம். பல விமர்சனங்களுக்கு இடையே, முதல்-அமைச்சருடனான சந்திப்பை பெருமைக்குரியதாக பார்க்கிறேன். என் தந்தை மரணத்தையொட்டி அவர் அறிக்கை கொடுத்ததோடு நிறுத்தியிருக்கலாம். அதிலேயே நான் ஆறுதல் அடைந்திருந்தேன். ஆனால் செல்போனில் அவர் என்னை அழைத்துப் பேசியதில் நெகிழ்ந்து போனேன். எனவே அவரை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்று நினைத்தேன்.
இவ்வாறு அவர்கள் பேட்டி அளித்தனர்.