சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.02.2026 அன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூசைத் திட்டத்தில் நிதி வசதியற்ற 1,000 கோவில்களை இணைத்து விரிவாக்கம் செய்திட அரசு நிதி 25 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக அதன் மேலாண்மை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) பூஜா குல்கர்னியிடம் வழங்கினார். மேலும், ஒருகால பூசைத் திட்ட அர்ச்சகர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஊக்கத்தொகையினை 1,500/- ரூபாயாக உயர்த்தி வழங்கிடும் அடையாளமாக 10 அர்ச்சகர்களுக்கு அதற்கான காசோலைகளையும், 19,000 ஒருகால பூசைத் திட்டத் கோவில்களுக்கு 8.58 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட பூசை உபகரணங்களை வழங்கிடும் அடையாளமாக 50 ஒருகால பூசைத் திட்ட கோவில்களின் அர்ச்சகர்களிடம் பூசை உபகரணங்களையும் வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள நிதி வசதி குறைவாக உள்ள ஒருகால பூசை கூட செய்திட இயலாத கோவில்களுக்கு உதவிடும் வகையில் ஒருகால பூசைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கோவிலின் பெயரிலும் முதன்முதலில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து பூசை செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், பூசை செலவினத்திற்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டதை அறிந்து அதனை ஈடுகட்டும் வகையில் 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “12,959 கோவில்களுக்கு ஒரு கால பூசைத் திட்டத்தை செயல்படுத்த 130 கோடி ரூபாய் நிலை நிதி ஏற்படுத்தப்படும்“ என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒருகால பூசை நடைபெறும் 12,959 கோவில்களுக்கு ஏற்கனவே வைப்பு நிதியாக ஒவ்வொரு கோவிலுக்கும் வழங்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாயை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி அரசு நிதியாக 130 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் 29.11.2021 அன்று வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, 2022-2023 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் இத்திட்டமானது மேலும் 2,000 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு அதற்கானத் தொகை 40 கோடி ரூபாய் அரசு நிதியாக வழங்கப்பட்டது. 2023-2024 ஆம் நிதியாண்டில் ஒருகால பூசைத் திட்டம் கூடுதலாக 2,000 கோவில்களுக்கு விரிவுப்படுத்திடும் வகையில் அரசு நிதி 30 கோடி ரூபாய் மற்றும் பொதுநல நிதி 10 கோடி ரூபாய் சேர்த்து 40 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் 01.11.2023 அன்று வழங்கினார்.
பூசைக்கு தேவையான பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஒருகால பூசைத் திட்ட கோவில்களின் வைப்பு நிதியை உயர்த்திட வேண்டும் என்ற அடிப்படையில் 2024-2025 ஆம் நிதியாண்டில் “ஒருகால பூசைத் திட்டத் கோவில்களின் வைப்புத் தொகை 2 லட்சம் ரூபாயிலிருந்து 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுமென்றும், மேலும், இவ்வாண்டு 1,000 நிதி வசதியற்ற கோவில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு முதல்-அமைச்சர் 17,000 ஒருகால பூசைத் திட்ட கோவில்களுக்கு உயர்த்தப்பட்ட வைப்பு நிதி 85 கோடி ரூபாய் மற்றும் இத்திட்டத்தை கூடுதலாக 1,000 கோவில்களுக்கு விரிவுப்படுத்தும் வகையில் 25 கோடி ரூபாய், என மொத்தம் 110 கோடி ரூபாய்க்கான காசோலையினை 21.03.2025 அன்று வழங்கினார்.
2025 – 2026 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் “ஒருகால பூசைத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 18,000 கோவில்கள் பயனடைந்து வருகின்றன. இவ்வாண்டு 1,000 நிதி வசதியற்ற கோவில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்கான மொத்த செலவினம் 25 கோடி ரூபாய் அரசு நிதியாக வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில் 25 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக அதன் மேலாண்மை இயக்குநரிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து ஒருகால பூசைத் திட்டத்தில் பயன்பெறும் கோவில்களின் எண்ணிக்கை 19,000 ஆக உயர்ந்துள்ளது.
ஒருகால பூசைத் திட்ட கோவில்களின் அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை ஏதும் வழங்கப்படாமல் இருந்த நிலையில் இந்த அரசு பொறுப்பேற்றபின், 2021–2022 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஒருகால பூசைத் திட்ட அர்ச்சகர்களுக்கு முதன்முறையாக மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.1,000/- வழங்கும் திட்டத்தினை 11.09.2021 அன்று தொடங்கி வைத்து, அதற்கான காசோலைகளை வழங்கினார்.
2025–2026 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், “ஒரு கால பூசைத் திட்ட கோவில்களில் பூசை செய்யும் அர்ச்சர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மாத ஊக்கத்தொகை ரூ.1,000/- லிருந்து ரூ.1,500/- ஆக உயர்த்தி வழங்கப்படும்“ என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் 19,000 ஒருகால பூசைத் திட்ட அர்ச்சகர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.1,500/- வழங்கிடும் அடையாளமாக 10 அர்ச்சகர்களுக்கு அதற்கான காசோலைகளை வழங்கினார்.
2025–2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பில், “ஒருகால பூசைத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ள 18,000 திருக்கோயில்களுடன் இவ்வாண்டு விரிவுபடுத்தப்படும் 1,000 கோவில்களை சேர்த்து மொத்தம் 19,000 கோவில்களுக்கு பூசைகள் செய்திட உதவியாக பித்தளை தாம்பாளம், தூபக்கால், மணி, விளக்கு உள்ளிட்ட பூசை உபகரணங்கள் வழங்கப்படும்“ என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் 8.58 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட பூசை உபகரணங்களை 19,000 ஒருகால பூசைத் திட்ட கோவில்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 50 ஒருகால பூசைத் திட்ட கோவில்களின் அர்ச்சகர்களிடம் பூசை உபகரணங்களை வழங்கினார். ஒவ்வொரு கோவிலுக்கும் ரூ.4,515/- செலவில் பித்தளையிலான தாம்பாளம், தட்டு (3 கிண்ணங்களுடன்), சொம்பு, தூபக்கால், மணி, காமாட்சி விளக்கு மற்றும் பஞ்சபாத்திரம் ஆகிய பூசை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அரசு பொறுப்பேற்றபின், ஒருகால பூசைத் திட்ட கோவில்களின் மின் கட்டணத்தை துறையே செலுத்திடும் வகையில் 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கோவில்களின் மின் கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஒருகால பூசைத் திட்ட கோவில்களின் அர்ச்சகர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில கல்வி உதவித்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வீதம் 1,500 மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஒருகால பூசைத் திட்டத்திற்கு மட்டும் 335 கோடி ரூபாய் அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் முனைவர் துரை. ரவிச்சந்திரன், கோ.செ.மங்கையர்க்கரசி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.