தமிழக செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம்,

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

நான் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே என் தேசத்துக்காகவே தவிர எனக்காக அல்ல என்று வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார். தனது தேகத்தையே தேசத்துக்காக ஒப்படைத்தவர் அவர். மனிதனை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் பெயரால் மட்டுமே மரியாதை கொடுக்க வேண்டுமே தவிர சாதியால் அல்ல என்று சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக முழங்கியவர் பசும்பொன் தேவர் திருமகனார். அனைவருக்குமான தலைவர் அவர்.

பக்குவப்பட்ட ஒருவன், இந்து கோவிலில் காட்டுகின்ற தீப வெளிச்சத்தையும் - கிறித்துவ வளாகத்தில் வைக்கிற மெழுகுவத்தி ஒளியையும் - முகமதியர் ஊதுபத்தியில் காணுகின்ற சுடரையும் தன் உடலின் இருட்டைப் போக்க எழுப்ப வேண்டிய ஞான விளக்கின் வடிவமாகக் காண்பான் என்று சொன்ன மதநல்லிணக்க மாமனிதர்.

தனியாக இருக்கும்போது சிந்தனை செய்வதில் கவனம் செலுத்துங்கள். கூட்டத்தோடு இருக்கும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள் என்று சொன்ன தத்துவஞானி. நேரம் வரும்போது யானையை எதிர்க்கும் வீரமும் தீரமும் - அதேநேரத்தில் எறும்பு கடிக்கும் போது கோபம் வராமல் வருடிக் கொடுக்கும் பொறுமைக் குணமும் அரசுக்கு அமைந்திருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு இலக்கணம் வகுத்த அரசியல் மேதை.

முழு இந்தியாவிலும் வாழ்க தமிழ் என்று முழங்கிய தமிழ் ஆளுமை. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முன்மொழிந்த இந்த முத்துமொழிகளைப் பின்பற்றி நடப்பதுதான் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி. வாழ்க அவரது புகழ்! வெல்க அவரது சிந்தனைகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியான அ.தி. மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், காமராஜ், விஜயபாஸ்கர், பாஸ்கரன், அன்வர்ராஜா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, செந்தில்நாதன் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் எம்.பி., தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் கருமாணிக்கம் (திருவாடானை), மாங்குடி (காரைக்குடி), ராமச்சந்திரன் (அறந்தாங்கி), முன்னாள்எம்.எல்..ஏ.க்கள் ராமசாமி, மலேசியா பாண்டியன் உள்பட காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட பொருளாளர் கணபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

ம.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் வைகோ, தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் பேட்ரிக் உள்பட அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. சார்பில் அக்கட்சி தலைவர் ஜி.கே.மணி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், மூவேந்தர் முன்னேற்ற கழகம் நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையார், மூவேந்தர் முன்னணி கழகம் தலைவர் டாக்டர் சேதுராமன் மற்றும் மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள், சமுதாய அமைப்புகள் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி