மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
கப்பலோட்டிய தமிழன் என்று பெருமையுடன் அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சென்னை, ராஜாஜி சாலையில் துறைமுகம் வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் உருவச்சிலை மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு இருந்தது. அதன் கீழ் அவருடைய உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 9.40 மணிக்கு வருகை தந்து வ.உ.சிதம்பரனாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய கையேட்டை மு.க.ஸ்டாலின் வெளியிட, அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார்.
மத்திய மந்திரி எல்.முருகன்
தொடர்ந்து மத்திய மந்திரி எல்.முருகன், வ.உ.சிதம்பரனாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மு.க.ஸ்டாலினுக்குவ.உ.சி. குடும்பம் நன்றி
வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப்பேரன் டாக்டர் கபிலாஸ் போஸ், சென்னை துறைமுகத்தில் வ.உ.சிதம்பரனாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் அவர் கூறும் போது, தமிழக சட்டசபையில் 14 திட்டங்களை வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. வ.உ.சிதம்பரனாரின் புகழையும், பெருமையையும் வருங்கால இளைஞர்களும், மாணவர்களும் கற்றுக்கொள்ளும் வகையில் பாடப்புத்தகங்கள், திரைப்படங்கள் மூலமாக பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க தங்கள் குடும்பத்துடன் கையை உயர்த்தி இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக மிகவும் நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.