சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வஞ்சிக்கப்படுகிறது
தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் வஞ்சகத்தையும், மாநில அரசின் அடிமைத்தனத்தையும் கண்டு பொதுமக்கள் கடும் சினம் கொண்டுள்ளதை எந்தப்பக்கம் திரும்பினாலும் உணர முடிகிறது.
காவிரி விவகாரத்தில் எவ்வித அரசியல் காரணங்களுக்கும் இடம்தராமல் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப எதிர் கட்சியான தி.மு.க பல முயற்சிகளை மேற்கொண்டும், மாநிலத்தை ஆள்பவர்கள் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதால், தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது.
போராட்ட நெருப்பு
ஸ்கீம் என்பதே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் என்பதை மத்திய பா.ஜ.க. அரசு புரிந்தும், கர்நாடக தேர்தல் லாபத்திற்காக புரியாதது போல் கபட நாடகமாடிக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் தேர்தல் நடக்கும் நேரத்தில் இந்த ஸ்கீமை உருவாக்கினால் கலவரம் வரும் என்று மத்திய அரசே கற்பனை செய்துகொண்டு உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும், விவசாய அமைப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். சாலை மறியலும், ஆர்ப்பாட்டங்களும் விண்ணதிரும் முழக்கங்களுடன் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்ட நெருப்பு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஊழித்தீயாக பரவவேண்டும்.
வாழ்வுரிமை போர்
தமிழகத்தின் அடிப்படை உரிமையை மீட்கவும், தமிழர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதைத் தவிர்க்கவும் பொதுமக்களின் பங்கேற்புடன் அடுத்தடுத்த போராட்டக் களங்களுக்கு தயாராக வேண்டும். இப்போதும் கூட சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தி.மு.க.வினர் அணி அணியாகத் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதும், ரெயில் மறியல் செய்வதும் என் காதுக்கு எட்டுகிறது. இது, தி.மு.க.வின் தனிப்பட்ட போராட்டமல்ல, தமிழக மக்களின் வாழ்வுரிமை போர்.
அதனால், 5-ந்தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கான பரப்புரையை விரைந்து மேற்கொண்டு அதில் விவசாயிகள், தொழிற்சங்கத்தினர், மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் என ஒட்டுமொத்த மக்கள் படை கிளர்ந்தெழும் வகையில், அனைவரையும் ஒருங்கிணைத்தும், தோழமைக் கட்சியினர், பொதுநல அமைப்பினர் ஆகியோருடன் கரம் கோர்த்தும், முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிபெறச் செய்து மத்திய, மாநில அரசுகளின் முகமூடியைக் கிழித்தெறிந்திட வேண்டும்.
நடுங்கட்டும்
அதன் அடுத்தகட்டமாக நடைபெறவுள்ள காவிரி உரிமை மீட்பு பயணம் மற்றும் பிரதமர் வருகையின் போது கருப்புக்கொடி போராட்டம் ஆகியவற்றையும் பெருந்திரளான மக்கள் ஆதரவுடன், ஜனநாயக உரிமை காக்கும் அறவழியில் நடத்திட ஆயத்தமாகும்படி கேட்டுக் கொள்கிறேன். மக்கள் படை திரளட்டும்; மத்திய, மாநில அரசுகள் நடுங்கட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.