தமிழக செய்திகள்

“மக்களுக்காக பாடுபடுபவர்களுக்கு ஆதரவு தாருங்கள்” மு.க.ஸ்டாலின் பேச்சு

“மக்களுக்காக பாடுபடுபவர்களுக்கு ஆதரவு தாருங்கள்” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. முன்னாள் செயலாளர் மறைந்த என்.பெரியசாமியின் பேரனும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ.- ஜீவன் ஜேக்கப் ஆகியோரின் மகனுமான டாக்டர் மகிழ்ஜான் சந்தோஷ் - டாக்டர் கீர்த்தனா ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று தூத்துக்குடியில் நடந்தது.

விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின், மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பிரசார நிகழ்ச்சி

தூத்துக்குடியில் தி.மு.க. வுக்கு தூணாக, தலைவர் கலைஞரின் முரட்டு பக்தனாக விளங்கிய பெரியசாமியின் பேரன் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி இது. பெரியசாமி இயக்க தோழர்களோடு இணைந்து, பிணைந்து அவர் செய்து உள்ள பணிகளை எல்லாம் நாம் இன்றும் நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். அதனால்தான் கலைஞர், அவரை செல்லமாக முரட்டு பக்தன் என்று அழைத்தார். அவருடைய வழிநின்று, அவரது மகள் கீதாஜீவன் இந்த மாவட்டத்தில் கழகத்தை வழிநடத்திக்கொண்டு இருக்கிறார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியை கூட கழகத்துக்கு பயன்படக்கூடிய வகையில், கழக பிரசார நிகழ்ச்சியாகவே நடத்தி உள்ளார்.

மணமக்களுக்கு அறிவுரை, ஆலோசனைகளை கூற வேண்டிய அவசியம் இல்லை. காரணம் விஞ்ஞான உலகில் வளர்ந்து கொண்டு இருக்கிறோம். படித்தவர்கள், நாட்டு நடப்புகளை நன்றாக அறிந்து வைத்து இருப்பவர்கள். குறிப்பாக இன்றைய அரசியல் சூழ்நிலையையும் தெளிவாக தெரிந்து வைத்து இருப்பவர்கள்தான். மணமக்கள் எல்லா வளமும் பெற்று சிறப்போடு வாழ்ந்து, நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

ஆதரவு தாருங்கள்

நாட்டில் தற்போது ஏற்பட்டு உள்ள நிலைமைகள் எல்லாம் நன்றாக தெரியும். அது மத்தியில் இருக்கும் ஆட்சியாக இருந்தாலும் சரி, மாநிலத்தில் நடைபெறும் ஆட்சியாக இருந்தாலும் சரி எந்த உணர்வோடு ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பது மக்களாகிய உங்களுக்கு நன்றாக தெரியும். நாடு முழுவதும் போராட்டம், சாலை மறியல், உண்ணாவிரதம், கண்டன கூட்டங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. நாட்டு நடப்புகளை நன்றாக புரிந்து கொண்டு, வரக்கூடிய காலங்களில் உங்களுக்கு பாடுபடக்கூடியவர்கள் யார், உங்களுக்கு பணியாற்றக்கூடியவர்கள் யார், உங்கள் பிரச்சினைகளை பற்றி சிந்திக்கக்கூடியவர்கள் யார் என்பதை மட்டும் சிந்தித்து பார்த்து அவர்களுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா, ஆஸ்டின், பூங்கோதை ஆலடி அருணா, மனோதங்கராஜ், ஏ.எல்.எஸ்.லட்சுமணன், சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி மற்றும் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்