சென்னை.
யூ.பி.எஸ்.சி.யானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட பல்வேறு மத்திய குடிமைப் பணியிடங்களுக்கான அதிகாரிகளை தேர்ந்தெடுக்க தேர்வு வைத்தது. இதன் இறுதி முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 761 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 545 ஆண்கள் மற்றும் 216 பெண்கள் அடங்குவர். இதில் தமிழகத்தில் இருந்து 40 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித் என்பவரும் தேர்வாகியுள்ளார்.
இந்த நிலையில் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்தியக் குடிமைப் பணிக்குத் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள அனைவருக்கும் எனது பாராட்டுகள். சிறப்பாகப் பணியாற்றிட வாழ்த்துகள்.கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித் அவர்கள் தேர்வுபெற்றதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. தேர்ச்சி பெறாதோர் துவளவேண்டாம்.
முயற்சி திருவினையாக்கும் என்று நம்பி உழையுங்கள். வரும் ஆண்டுகளில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அதற்குண்டான ஆதரவையும் உரிய பயிற்சியையும் நமது அரசு வழங்கும் என்ற உறுதியை இத்தருணத்தில் அளிக்கிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.