கம்பம்
தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் நிதி நிறுவனத்தின் மாதாந்திர தவணைத் தொகை மூலம் செல்போன் வாங்கிய பெண் ஒருவர், சரியாக தொகையை திருப்பி செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அப்பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய ஊழியர்கள், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தன்னுடைய கணவரிடம் அப்பெண் முறையிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கணவர், நேற்று மாலை பைனான்ஸ் நிறுவனத்திற்குள் அரிவாளுடன் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.
அவரிடம் பேச்சு கொடுத்த ஊழியர்கள் சிறிது நேரத்திற்கு பிறகு அலுவலகத்தின் வெளிப்பக்கம் பூட்டு போட்டு விட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு போலீசார் வருவதற்கு முன்பே கதவுகள் திறக்கப்பட்டதால் புலம்பியபடியே அந்த நபர் வெளியே சென்றுவிட்டார்.