சென்னை,
சென்னையில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக மாநகர் முழுவதும் வெள்ளக்காடாய் மாறிப்போனது. பிரதான சாலைகளிலும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியிருந்ததை பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முதலே மிதமான மழை பெய்ய தொடங்கியது. அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொண்டாலும், தொடர்ந்து மழை பெய்தபடியே இருந்தது. இடையிடையே வீசும் குளிர்ந்த காற்றும் சில்லிட வைத்தது. ஆக்ஷன் படம் பார்த்த கண்களுக்கு காதல் படங்களை பார்த்தது போல, நேற்று முன்தினம் சரவெடியாய் பெய்த கனமழைக்கு பார்த்து மிரண்டு போன மக்கள் நேற்றைய ரம்மியமான மழையை ரசித்தனர் என்றே சொல்லலாம்.
மாநகரை சூழ்ந்த பனி போர்வை
சென்னை நகர் முழுவதும் நேற்று அதிகாலை தொடங்கி காலை 10 மணி வரையிலுமே பனி சூழ்ந்து காணப்பட்டது. சென்னை மாநகரை பனிப்போர்வை சூழ்ந்தது போல இந்த காட்சி அமைந்தது. காலை வேளையிலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்கள் சென்றதை பார்க்க முடிந்தது.
அந்தவகையில் நேற்று முன்தினம் மழையால் வீடுகளில் முடங்கி இருந்த மக்கள் நேற்றைய தினம் வெகுவாக நடமாடத் தொடங்கினர். சாலையோர கடையில் தொடங்கி சூப்பர் மார்க்கெட்டுகள் வரை பெரும்பாலான கடைகள் நேற்று செயல்பட்டன. அந்த வகையில் காணும் காட்சிகள் அனைத்தும் இயல்பு வாழ்க்கை மீள தொடங்கியுள்ளதை உணர்த்தின.
குற்றாலம் போல குளிர்ச்சி
எது எப்படி இருந்தாலும் நேற்றைய சூழ்நிலை சென்னை நகரை குற்றாலம் போல குளிரச்செய்து விட்டது. ஆனாலும் அடுத்து வரும் நாட்கள் மிக கனமழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளதால், சென்னை மக்கள் கலக்கத்திலேயே இருப்பதை பார்க்க முடிகிறது. இதனால் சென்னை மக்கள் வருண பகவானை இப்போதே வேண்ட தொடங்கிவிட்டனர்.