நெல்லை,
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் தலைகளை வெட்டி எடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என முகநூலில் அவதூறான செய்தி வைரலாக பரவியது.
இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்த முத்துபாண்டி என்பவர் மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவீன்குமார் அபிநபுவிடம் புகார் கொடுத்தார். மாநகர சைபர் கிரைம் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர்.
முதற்கட்டமாக முகநூலில் இருந்த அந்த பதிவை மற்றவர்களுக்கு அனுப்ப முடியாத அளவில் முடக்கினர். போலீசார் நடத்திய விசாரணையில், அவதூறு பரப்பியவர், நெல்லையை அடுத்த ராமையன்பட்டி அருகே உள்ள சேதுராயன்புதூரைச் சேர்ந்த செல்லப்பா என்ற அப்துர்ரகுமான் என்பது தெரியவந்தது.
இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மாற்று மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு செல்லத்துரை என்ற தனது பெயருடன் அப்துர் ரகுமான் என்று சேர்த்து கொண்டார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குடும்பத்துடன் குடியேறிய அவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கால் டாக்சி டிரைவராக வேலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இவரை போலீசார் தேடி வந்த நிலையில் அப்துர் ரகுமான், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பூர்வீக சொத்து விற்க வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து காயல்பட்டினம் பகுதியில் பதுங்கி இருந்த போலீசார், அங்குள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் குளிக்க வந்த அப்துர் ரகுமானை மடக்கி பிடித்தனர்.
பின்னர் விசாரணையில் அவர், பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை பற்றி அவதூறு கருத்து பதிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததையும் மற்றும் இந்தி மொழியை கேலி செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதையும் ஒப்புக்கொண்டார். மேலும், அப்துர் ரகுமானுக்கு தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து நவீன செல்போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.