தமிழக செய்திகள்

கொரோனா சிகிச்சை மையங்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம் -தமிழக அரசு அரசாணை

கொரோனா சிகிச்சை மையங்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனா சிகிச்சை மையங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணி ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட பெரிய அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகம் மற்றும் அம்பத்தூர் அரசு அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவையும் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையங்களாக இயங்கி வருகின்றன.

இந்த சிறப்பு மையங்களில் ஆயிரக்கணக்கான படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு கொரோனா நோயாளிகள் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதவிர தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை மையங்கள் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை விவரங்கள் மற்றும் நோயாளிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரியான தரேஸ் அகமது பணியமர்த்தப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இவர் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் செயல்படும் கொரோனா சிகிச்சை மையங்களை தினமும் கண்காணித்து நோயாளிகளின் விவரங்கள், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் போன்றவற்றை தமிழக அரசுக்கு உடனுக்குடன் தெரிவிப்பார்.

இதன் மூலம் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் பற்றிய முழுமையான விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வழி ஏற்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள், முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் கொரேனா சிகிச்சை குறித்து கண்காணிப்பார்.