அமைச்சர் ராஜ்மோகன்  
தமிழக செய்திகள்

பருவமழை முன்னெச்சரிக்கை: கட்டுப்பாட்டு மையம் மற்றும் ராயபுரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் நேரில் ஆய்வு

மக்களிடமிருந்து வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள பணியாளர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனைகளை வழங்கினார்.

சென்னை,

பள்ளி கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ராஜ்மோகன், ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பு பணிகளையும், ராயபுரம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது;-

ஆலோசனைகள்

பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், ரிப்பன் கட்டட அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மக்களிடமிருந்து வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

ராயபுரம்

முன்னதாக, அமைச்சர், ராயபுரம் மண்டலம், வார்டு-58க்குட்பட்ட ஜோதி வெங்கடாசலம் சாலையில் விழும் நிலையில் தாழ்வாக இருந்த மரங்களின் கிளைகளை கத்தரித்து அப்புறப்படுத்தும் பணியினையும், அழகப்பா சாலையில் 100 எச்.பி. திறன் கொண்ட நீர் உறிஞ்சி மோட்டார்கள் மூலம் மழைநீர் வடிகாலில் அதிகளவில் உள்ள மழைநீரினை வெளியேற்றும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது, வடக்கு வட்டார துணை ஆணையர் ஸ்வேதா சுமன், தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் லயோலா மணி, உதவி ஆணையர் சத்தியநாராயணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT