தமிழக செய்திகள்

தவெக ஆட்சி பத்தி போக போக இன்னும் பல உண்மை வெளிவரும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திமுக வெறும் அரசியல் இயக்கம் கிடையாது, வெறும் ஒரு கட்சி கிடையாது. அது ஒரு சமுதாய இயக்கம் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தஞ்சை,

தஞ்சையில் திமுக கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்

தேர்தல் முடிவு வந்த பிறகு, நம்முடைய தலைவர் கலந்துகொள்கின்ற முதல் நிகழ்ச்சி, முதல் பொது நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. திருமண நிகழ்ச்சி இன்னைக்கு ஒரு சாதாரண திருமண நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், நம்முடைய கழகத்துடைய நிகழ்ச்சியாக இன்னைக்கு மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மணமகள் திருவாரூர் மாவட்டம், மணமகன் திருச்சி மாவட்டம், திருமணம் நடைபெறுகின்ற இந்த இடம் தஞ்சாவூர் மாவட்டம். மொத்தத்துல இந்த நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சி ஒட்டுமொத்த டெல்டா மாவட்டமும் சேர்ந்து ஒரு கூட்டணி அமைச்சு இந்த நிகழ்ச்சியை நடத்திக்கிட்டு இருக்கு.

யார் எந்த பக்கம் போனாலும், எந்த மாவட்டம் எந்த முடிவு எடுத்தாலும், டெல்டா எப்பொழுதுமே திராவிட முன்னேற்றக் கழகம் பக்கம்தான் என்பதை நிரூபிச்சு காட்டிய அத்தனை பேருக்கும் முதல்ல என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரை நீங்க என்னைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டீங்க. திருவாரூர் மாவட்டம் மட்டும் இல்ல, ஒட்டுமொத்த டெல்டாவுமே இன்னைக்கு கழகத்துடைய கோட்டையாகத்தான் விளங்கி கொண்டிருக்கிறது. கழகத்துடைய வரலாற்றில், அதுவும் குறிப்பாக இந்த டெல்டா பகுதியுடைய அரசியல் வரலாற்றில் அண்ணன் பூண்டி கலைச்செல்வன் அவர்களுடைய பெயர் என்னைக்குமே நிலைச்சு நிற்கும். இன்னைக்கு அண்ணன் கலைச்செல்வன் அவர்களுடைய வழியில, அவருடைய தம்பி நம்முடைய அண்ணன் கலைவாணன் அவர்களும், அவருடைய மகன் தம்பி கலைவேந்தனும், அவங்களுடைய ஒட்டுமொத்த குடும்பமும் இன்னைக்கு கழகத்திற்காக களத்துல இறங்கி உழைச்சுக்கிட்டு இருக்காங்க. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த குடும்ப நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளதில் எனக்கு மிகுந்த பெருமை.

முத்தமிழறிஞர் கலைஞர் சொன்ன மாதிரி, திமுக வெறும் அரசியல் இயக்கம் கிடையாது, வெறும் ஒரு கட்சி கிடையாது. அது ஒரு சமுதாய இயக்கம். தேர்தலில் வெற்றி தோல்விங்கிறது எல்லாம் சகஜம். மற்ற கட்சிகளைத்தான் அதெல்லாம் பாதிக்கும். சமுதாய இயக்கம் எப்போதும் போல, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் போல மக்கள் பணிகளைத் தொடர்ந்து நாங்க செஞ்சுக்கிட்டுதான் இருப்போம்.

ஒரே வரியில சொல்லணும்னா, தேர்தல் அரசியலைத்தான் நாம் தோற்றிருக்கோமே தவிர, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கோமே தவிர, கொள்கை அரசியல்ல திமுக என்னைக்குமே தோத்தது கிடையாது, தோற்கவும் மாட்டோம். எனவே கழக உடன்பிறப்புகள், நாம மீண்டும் எப்போதும் போல நம்முடைய களப்பணியை, மக்கள் பணியைத் தொடருவோம்.

ஆளுங்கட்சியா இருந்தப்ப மட்டும் இல்லாம, எதிர்க்கட்சியா இருக்கப்போகும் நமக்கும், நமக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாம, வாக்களிக்காம போன மக்களுக்கும் சேர்த்தே நம்முடைய தலைவர் எப்போதும் சொல்வது போல நாம உழைப்போம். நாம தமிழ்நாட்டுக்கு வருகின்ற ஆபத்துகளை எல்லாம் நிச்சயம் தடுத்து நிறுத்துவோம். மாநில உரிமைகளை நிச்சயம் காப்போம். இப்பவே இந்த பத்து நாட்களிலேயே மக்கள், பல பெண்கள், இளைஞர்கள், இந்த ஆட்சியுடைய உண்மையான முகத்தை உணர்ந்திருப்பாங்க. போகப் போக இன்னும் பலருக்கு பல உண்மைகள் தெரிய வரும்.

நம்முடைய தலைவர் அவர்கள் சொன்னது போல சூரியன் ஒருபோதும் மறையாது, அது மறுபடியும் உதிக்கும். அதன் ஒளியில தமிழ்நாடு மீண்டும் செழிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.