சென்னை,
வங்க கடல் பகுதியில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின்னர் புயலாக மாறியது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று (நேற்று முன்தினம்) நிலை கொண்டு இருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று (அதாவது நேற்று) காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த புயல் மாலை 4 மணி அளவில் சென்னைக்கு வட கிழக்கே சுமார் 860 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது. மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் வட தமிழகத்தை நோக்கி மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இந்த புயல் கடலூருக்கும், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) முற்பகலில் கரையை கடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலூருக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 400 கிலோ மீட்டர் ஆகும். பெரும்பாலும் வட தமிழக பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
கஜா புயல் காரணமாக வருகிற 14-ந் தேதி (புதன்கிழமை) இரவு முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அந்த நேரத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
எனவே மீனவர்கள் திங்கட்கிழமை (இன்று) முதல் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் திங்கட் கிழமைக்குள் (இன்று) கரை திரும்புமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.