தமிழக செய்திகள்

மயிலாப்பூர் தொகுதிக்கு எகிறும் மவுசு: திமுக, அதிமுக கூட்டணியில் போட்டா போட்டி

தலைநகர் சென்னையில் உள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்றான மயிலாப்பூரில் அதிமுக 6 முறையும், திமுக 4 முறையும், பாஜக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

தலைநகர் சென்னையில் உள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்று மயிலாப்பூர். நீதிக்கட்சி காலத்தில் இருந்தே தேர்தலை சந்தித்து வரும் பழமையான தொகுதி. 1952 முதல் 1967 வரை 4 தேர்தல்களும், அதன்பிறகு 11 தேர்தல்களும் நடைபெற்றுள்ளன.

கடைசியாக நடந்த 11 தேர்தல்களில் கபாலி (திமுக, 1977), கபாலி (அதிமுக, 1980), பா.வளர்மதி (அதிமுக, 1984), கணபதி (திமுக, 1989), ரங்கராஜன் (அதிமுக, 1991), ராமஜெயம் (திமுக, 1996), லட்சுமணன் (பாஜக, 2001), எஸ்.வி.சேகர் (அதிமுக, 2006), ராஜலட்சுமி (அதிமுக, 2011), ஆர்.நடராஜ் (அதிமுக, 2016), தா.வேலு (திமுக, 2021) ஆகியோர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாக இருந்துள்ளனர். அதாவது அதிமுக 6 முறையும், திமுக 4 முறையும், பாஜக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

போட்டா போட்டி:

இந்த நிலையில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியை கேட்டுப் பெறுவதில் திமுக, அதிமுக கூட்டணியில் போட்டா போட்டி நிலவுகிறது. அதாவது, தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. - மக்கள் நீதிமய்யம் இடையேயும், அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயும் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன், விருகம்பாக்கம், வேளச்சேரியைவிட மயிலாப்பூர் தொகுதியே போட்டியிட சரியான தொகுதியாக இருக்கும் என்று கருதுகிறாராம். பிராமணர்கள் அதிகம் உள்ள தொகுதி இது என்பதால், பா.ஜ.க.வுக்கும் ஏற்கனவே இங்கு இரட்டை இலக்கத்தில் வாக்கு சதவீதம் கிடைத்துள்ளதால், வெற்றி வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறாராம்.

பா.வளர்மதி ஆர்வம்:

ஆனால் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி போட்டியிட கேட்கிறாராம். இவர் ஏற்கனவே இதே தொகுதியில் 1984-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். எனவே, அவர் கடந்தமுறை போட்டியிட்ட ஆயிரம்விளக்கு தொகுதி வேண்டாம் என்று கூறுகிறாராம். மேலும், மயிலாப்பூர் தொகுதியை அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனும், நிர்வாகி நிர்மலா பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், மாவட்ட செயலாளர் அசோக் ஆகியோரும் கேட்பதாக கூறப்படுகிறது.

மக்கள் நீதி மய்யத்துக்கு 'செக்':

இதேபோல், தி.மு.க. கூட்டணியில், தற்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ. வேலு மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். ஆழ்வார்பேட்டையும் இந்த தொகுதியில்தான் வருகிறது என்பதால், மக்கள் நீதி மய்யமும் இந்த தொகுதியை கேட்டுவருகிறதாம். ஆனால், இதற்கு பிடிகொடுக்காத தி.மு.க. தலைமையும், ஒரு வேளை வாய்ப்பு கொடுத்தாலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யத்துக்கு 'செக்' வைத்துள்ளதாம்.