நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் துளசியாப்பட்டினம் கிராமத்தில் அவ்வையார், விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அவ்வையாருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் அவ்வை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவை 2004 -ம் ஆண்டுக்கு முன்பு கிராம மக்கள் நன்கொடை வசூல் செய்து 3 முதல் 6 நாட்கள் வரை கொண்டாடி வந்தனர். 2005-ம் ஆண்டு முதல் இந்த விழா இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விழா நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.
இந்நிலையில், வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் அவ்வையாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து துளசியாப்பட்டினத்தில் அவ்வையாருக்கு மணி மண்டபம் கட்டுவதற்கான இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழக மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி குமார் , கூட்டுறவு வங்கி இயக்குனர் உதயம் முருகையன் உள்பட பலர் உடனிருந்தனர்.