சென்னை,
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன் உள்பட 7 பேரையும் முன்கூட்டியே விடுவிக்க தமிழக அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் மீது கவர்னர் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் உள்ளார். கவர்னரின் இந்த செயல் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதால், கவர்னரின் ஒப்புதல் இல்லாமலேயே தன்னை விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நளினி புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பதை முடிவு செய்ய நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நளினி தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன், நளினி தன்னை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி தற்போது 4-வது முறையாக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்தியாவிலேயே 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்கள் மனுதாரர் உள்ளிட்ட 7 பேராகத்தான் இருக்க முடியும்.
கவர்னர் அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி கடமையாற்ற தவறும்போது, நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காணவேண்டும். ஏற்கனவே, 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க கவர்னரிடம் ஒப்புதல் பெற்ற தமிழக அரசு, இந்த 7 பேரை விடுதலைக்காக இதுவரை கவர்னருக்கு அழுத்தம் கொடுக் கவில்லை. கவர்னரின் செயல் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று வாதிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வருகிற ஏப்ரல் 7-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அப்போது, நளினி கைது செய்யப்பட்டது நாள் முதல் அவரை விடுவிக்க அமைச் சரவை பரிந்துரை செய்த நாள் வரை நடந்துள்ள சம்பவங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் மனுதாரர் தரப்பு வக்கீல் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.