சென்னை,
தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், தமிழக காங்கிரஸ் கட்சி ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் மற்றும் சென்னை ஐ.ஐ.டி., கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது வைகோ எம்.பி. பேசியதாவது:-
இந்த நாட்டையே துண்டாடும் வகையில் பா.ஜ.க. அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 64 ஆண்டுகளுக்கு பிறகு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, பேரழிவு தரும் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் நாட்டுக்கு ஒரு அழிவு கிடைத்தது. தற்போது இந்த சட்ட திருத்தம் மூலம் மீண்டும் அழிவு ஏற்பட்டிருக்கிறது.
கேரளா, மேற்கு வங்காளம், அசாம் போன்ற மாநிலங்களில் இந்த சட்ட திருத்த மசோதவை ஏற்கவே முடியாது என்று போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளில் இருந்து வந்தவர்களில் இஸ்லாமியர்கள் தவிர்த்து அனைவருக்கும் குடியுரிமை உண்டு. ஈழத்தமிழர்களுக்கு கூட குடியுரிமை மறுக்கப்பட்டு இருப்பது நியாயமா? இதுதான் ஜனநாயக நடைமுறையா?
ஏற்கனவே தங்களது உரிமை பறிக்கப்பட்ட விவகாரத்தில் கந்தக கிடங்காக காஷ்மீர் மாறியிருக்கிறது. ஒரு சிறிய தீப்பொறி போதும், மிகப்பெரிய கிளர்ச்சியை நாடு சந்திக்கும் நிலை உள்ளது. ஜனநாயகம் செழிக்க போராடினார், மகாத்மா காந்தி. தற்போது தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் யமுனை நதிக்கரையிலே நீண்ட காலமாக மீளா துயில் கொண்டிருக்கும் மகாத்மா காந்தியின் எலும்பு துகள்கள் கூட நடுங்கி இருக்கும்.
இந்தியா ஒரு நாடாக இருக்கவேண்டும் என்றால், இச்சட்ட திருத்தம் நீக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய எதிர் விளைவுகளை நாடு சந்திக்கும். வடமாநிலங்கள் தாண்டி தமிழகத்திலும் போராட்டம் வந்துவிட்டது. இச்சட்டம் தூக்கி எறியப்பட வேண்டும். அதற்கு ஜனநாயக சக்திகள் கைகோர்த்து போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொல்.திருமாவளவன் எம்.பி. பேசுகையில், குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் கடும் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் தமிழகம் அதில் மந்த நிலையில் உள்ளது. இந்த சட்டத்தை இப்போது எதிர்க்காவிட்டால் இந்த நாட்டை பாசிச சக்திகளிடம் இருந்து எப்போதுமே மீட்க முடியாது, என்றார்.
ஆர்ப்பாட்டத்தின்போது ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர்கள் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் தீப்பந்தம் கொளுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.