தமிழக செய்திகள்

தேசிய விளையாட்டுப் போட்டி விவகாரம்: பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - டிடிவி தினகரன்

தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு மாணவர் கூட பங்கேற்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இனிவரும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6ஆம் தேதி டெல்லியில் தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பள்ளிகள் சார்பில் ஒரு மாணவர் கூட பங்கேற்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

போட்டிகளில் பங்கேற்க 247 மாணவர்களை அனுப்புமாறு லக்னோவில் இருந்து விளையாட்டு குழுமம் சார்பில் கடந்த மே மாதம் 11ஆம் தேதி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள உடற்கல்வி முதன்மை ஆய்வாளருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, அதனை பள்ளிக்கல்வித்துறை கவனிக்காமல் அலட்சியப்படுத்தியதால் மாணவர்கள் போட்டியில் பங்கேற்க இயலவில்லை என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறும் மாணவர்கள் உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டிற்கு கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்கும் இது வழிவகுக்கும் என்று சொல்லப்படும் நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போட்டிகளுக்கு மாணவர்களை அனுப்பக்கோரிய தகவலை உரிய முறையில் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் அலட்சியமாக இருந்தவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன், இனிவரும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்