தமிழக செய்திகள்

டெல்லியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாவில் தந்தி டி.வி.க்கு தேசிய விருது வழங்கபட்டது

டெல்லியில் நடைபெற்ற வாக்காளர் தின விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் தந்தி டிவிக்கான தேசிய விருதை நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பெற்றுகொண்டார்.

புதுடெல்லி

7வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் டெல்லியில் விழா நடைபெற்றது . இதில் 2016 ம் ஆண்டிற்கான ஜனாதிபதி விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மிகச்சிறப்பாக செயல்பட்டதாக மின்னணு ஊடகமாக தந்தி டிவி தேர்வு செய்யபட்டது. தேசிய ஊடக விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இருந்து, தந்தி டிவி நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பெற்று கொண்டார்.

2016 சட்டமன்ற தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு நிகழ்ச்சியை நடத்தியது தந்தி டிவி.

ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்பதையும், வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தனது ஊடகம் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் தந்தி டிவிக்கு பெரும்பங்கு உண்டு. காரசார அரசியல் செய்திகள், விவாதங்கள் என தொடர்ந்தாலும், வாக்களிக்க வேண்டியதன் அவசியம், ஓட்டுக்கு ஏன் பணம் வாங்க கூடாது, பணம் வாங்குவது வாக்குரிமையை விற்பதற்கு சமம் என்பதை வலியுறுத்தி பல்வேறு செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் வழங்கியது.

மேலும் ஆயுத எழுத்து, மக்கள் மன்றம் மற்றும் மக்கள் யார் பக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் அரசியல் நிகழ்வுகளை நேரடியாக அரசியல் சார்பின்றி மக்களிடையே கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது. இதுவே மக்களிடம் பெரும் வரவேற்பை பெற உறுதுணையாக இருந்தது என்பது குறிப்பிட தக்கது

தேர்தலில் சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கான விருதை தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பெற்றார். தேர்தல் செலவினங்களை சிறப்பாக கண்காணித்ததற்காக தமிழ்நாடு மண்டல வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் ராய்ஜோஸ் விருது பெற்றார். இளம் வாக்காளர்களை அதிக அளவில் சேர்க்க நடவடிக்கை எடுத்ததற்காக திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் பழனிச்சாமிக்கு விருது. வழங்கபட்டது அனைத்து தரப்பினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராக ராவிற்கு விருது வழங்கப்பட்டது.