சென்னை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் கோபமடைந்த கிணத்துக்கடவைச் சேர்ந்த பெரியார்மணி என்பவர் எம்.பி. மகேந்திரனின் டெல்லி முகவரிக்கு எலி மருந்தை கொரியர் மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில், ஆறு வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதற்கும் தயாராக உள்ளதாக அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் அதிரடியாக பேசினார்.
இந்த நிலையில் அதிமுக எம்பிக்கள் 3 பேரும், எம்.எல்.ஏ ஒருவரும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய தயார் என கூறினர்.
இந்த நிலையில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் கோபமடைந்த பெரியார்மணி என்பவர் எம்.பி. மகேந்திரனின் டெல்லி முகவரிக்கு எலி மருந்தை அனுப்பி வைத்துள்ளார். இது பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இந்நிலையில், தற்கொலை செய்து கொள்ள தயார் என கூறிய அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு விஷம் அளிக்க தயாராக உள்ளதாக டிடிவி தினகரன் தரப்பு ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி கூறியதாவது;-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவருக்கு எவ்வாறு தற்கொலை செய்து கொள்வது என்பதில் குழப்பம் இருக்கலாம். எனவே அவருக்கு விஷம் மற்றும் தூக்கு கயிறு ஆகியவை தயாராக உள்ளது என கூறினார்.