தமிழக செய்திகள்

நக்சலைட் தாக்குதலில் பலி: 21 குண்டுகள் முழங்க மதுரை ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்

நக்சலைட் தாக்குதலில் பலியான மதுரை ராணுவ வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

புதூர்,

மதுரை அருகே கள்ளந்திரி ஊராட்சிக்கு உட்பட்ட பொய்கைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது 3-வது மகன் பால்சாமி (வயது 33). கடந்த 2008-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். அதன் பின்னர் இந்தோ திபெத் எல்லை காவல் படையில் நக்சல் தடுப்பு படையில் 14 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இவர் சத்தீஸ்கர் மாநிலம், நாரயன்பூர் மாவட்டம், சோன்பூர் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போது நக்சல் தீவிரவாதிகள் தாக்குதலில் சிக்கி பலியானார். இவருக்கு திருமணமாகி ராமலட்சுமி(26) என்ற மனைவியும், 2 வயது குழந்தையும் உள்ளனர்.

நச்சலைட் தாக்குதலில் பலியான லட்சுமணனின் உடல் நேற்று விமானம் மூலம் பெங்களூரு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கு இருந்து ராணுவ வண்டியில் மதுரை பொய்கைகரைப்பட்டிக்கு கெ ண்டுவரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன், போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார், ஊமச்சிகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இந்திய திபெத் எல்லை கேப்டன் பிரதாப்சிங், மூர்த்தி எம்.எல்.ஏ. மற்றும் ராணுவ அதிகாரிகள், கிராமத்தினர் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அவரது உடல் அடங்கிய பெட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் சுமந்து சென்றனர். இதையடுத்து ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.