தமிழக செய்திகள்

நெருங்கும் தாழ்வு பகுதி: சென்னைக்கு இன்று ‘ரெட் அலர்ட்'

வட தமிழக பகுதியை காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (வியாழக்கிழமை) நெருங்குகிறது என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டையில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

வங்க கடலில் கடந்த 13-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று (வியாழக்கிழமை) நெருங்குகிறது.

மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் இன்று பெய்யக்கூடும். எனவே மேற்சொன்ன மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையத்தால் ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு இருக்கிறது. அதி கனமழை என்றால், ஓரிரு இடங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகும்.

மேலும் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதில் மிக கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது.

நாளை (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தென்மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.

சென்னையில் பரவலாக இன்று மழை பெய்யும்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு, கடந்த 7 மற்றும் 11-ந் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கன முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே 2 முறை பெய்த கனமழையின்போது, தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அந்த அளவுக்கு மழை பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த முறை வட தமிழக பகுதியை நோக்கி வரும் தாழ்வு பகுதி பாதையில் சென்னை சரியான திசையில் இருப்பதாகவும், இதன் காரணமாக பரவலாக மழை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

அதிலும் குறிப்பாக காலையில் மழை சற்று குறைவாக காணப்பட்டாலும், பிற்பகலில் மழை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்