நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே அழிக்கால் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் ராட்சத அலைகள் உயரமாக எழும்பி கரையை நோக்கி ஆவேசத்துடன் வந்தன.
அழிக்கால் மற்றும் பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்துக்குள் புகுந்த கடல்நீர் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. நள்ளிரவு நேரத்தில் கடல்நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன நடந்தது என்பதை அறிய அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது தான் கடல்சீற்றம் ஏற்பட்டு இருந்தது மக்களுக்கு தெரிய வந்தது. இரவு நேரம் என்பதால் என்ன செய்வது என்று திகைத்தனர்.
இருந்தாலும் இரவோடு இரவாக வீட்டை காலி செய்வது என தங்களது பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். வீடு முழுவதும் மண் நிரம்பி கிடந்ததால் அவர்கள் விரைவாக வெளியேற முடியாமல் சிரமப்பட்டனர். ஏராளமான வீடுகளில் கட்டில், டி.வி. மெத்தை, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்களும் தண்ணீரில் மூழ்கின. சில வீடுகளில் இருந்த பொருட்களை பாதுகாப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தூக்கிச் சென்றனர்.
கடல்நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் விடிய, விடிய தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். பின்னர் மேடான பகுதியில் உள்ள உறவினர்களது வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். கடல் சீற்றம் மதியம் 12 மணி வரை நீடித்தது.
இதனால் பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் கல்லுக்கெட்டி சந்திப்பு பகுதியில் காலை 10 மணிக்கு திரண்டனர். அவர்கள், நாகர்கோவில்- குளச்சல் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மீனவ மக்கள் அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் புகுந்த மணலை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடற்கரையில் தற்காலிகமாக மணல் மூட்டைகளால் தடுப்பு சுவர் அமைக்கப்படும் என்றும் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.10 கோடி செலவில் விரைவில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என உறுதி அளித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.