தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே உள்ள கீழதட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. மரம் வெட்டும் தொழிலாளி. மனைவி லெட்சுமி.தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன்கள் சேந்தையன் (8), சிவசுப்பிரமணி (7), மகள் சிவகாமி (6).
சிறுமி சிவகாமி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 1 ம் வகுப்பு படித்து வந்தாள். சின்னத்தம்பியும், அவரது மனைவியும் தினமும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவர். அவர்களது குழந்தைகள் பள்ளிக்குசென்றுவிட்டு, பெற்றோர் வரும்வரை வீட்டில் தனியாக இருப்பார்கள் .
அதேபோல் நேற்று சிறுமி சிவகாமி பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தாள். அண்ணன்கள் பள்ளியில் இருந்து வராததால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.
இந்நிலையில் சிறுமி வீட்டிலும் தீப்பற்றி எரிவதாக பக்கத்து வீட்டை சேர்ந்த மாரிக்கண்ணன் என்ற சிறுவன் அப்பகுதியை சேர்ந்த ஆசிரியையிடம் கூறியுள்ளான். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது வீட்டினுள் சிறுமி சிவகாமி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தாள்.
இதுகுறித்து கீழத்தட்டப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். மேலும் சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் தங்களது வீட்டிற்கு விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதையடுத்து போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் கிடைந்த தடயங்களின் அடிப்படையில் சிறுமியை யாரேனும் எரித்து கொன்றிருக்கலாம் என்று சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.
மேலும் சிறுமியின் உடல் 30 சதவீதமே தீயில் எரிந்திருந்ததால் சிறுமி கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து வீட்டில் தீப்பிடித்து எரிந்ததாக தகவல் கூறிய சிறுவன் மாரிகண்ணன் மற்றும் அவனது நண்பனை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் சிறுமி சிவகாமியை கழுத்தை நெரித்து கொன்று உடலை தீவைத்து எரித்த அதிர்ச்சி தகவல் வெளியானது. போலீசாரின் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் விபரம் வருமாறு:-
சிறுமி சிவகாமி பள்ளி முடிந்து வீடு திரும்பி வீட்டில் விளையாடி
கொண்டிருப்பாளாம். அதே போல் நேற்று மாலையும் வீட்டில் விளையாடி கொண்டிருந்தாள். சிறுமி தனியாக இருப்பதை பார்த்த கண்ணன் என்பவரது மகன் மாரிக்கண்ணன் (வயது14) என்ற சிறுவன், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பனுடன் சேர்ந்து சிறுமி வீட்டிற்குள் நுழைந்துள்ளான்.
அப்போது ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்பதை அறிந்த மாரிக்கண்ணனின் நண்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். பின்னர் மாரிக்கண்ணன் வீடு புகுந்து சிறுமி சிவகாமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளான். அதில் வலி தாங்க முடியாமல் சிறுமி அலறியுள்ளாள்.
இதனால் சிறுமியை கழுத்தை நெரித்து மாரிக் கண்ணன் கொன்றுவிட்டான். பின்னர் தனது வீட்டிற்கு சென்று அங்கிருந்த மண் எண்ணையை குளிர்பான பாட்டிலில் அடைத்து எடுத்து வந்து சிறுமி உடலின் மேல் ஏராளமான துணிகளை போட்டு அதன் மீது தீ வைத்துள்ளான்.
அதன் பின்பு மாரிக்கண்ணன் சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி சிவகாமி வீடு தீப்பிடித்து எரிகிறது என கூச்சலிட்டுள்ளான். இதனால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்த போது அங்கு சிறுமி தீயில்கருகிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் போலீசார் மாரிக்கண்ணனின் நண்பனை பிடித்து விசாரணை நடத்திய போது சிறுமியை கற்பழித்து கொன்று விட்டு உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்து எரித்து விட்டு மாரிக்கண்ணன் நாடக மாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாரிக்கண்ணனை பிடித்து விசாரணை நடத்தியதில் சிறுமியை கொன்றதை ஒப்புக் கொண்டான்.
அப்போது அவன் போலீசில் அளித்த வாக்கு மூலத்தில், 9 ம் வகுப்பு வரை படித்த நான் அதன் பின்பு படிப்பு வராததால் பள்ளிக்கு செல்லவில்லை. சிறுமி தனியாக இருப்பதை அறிந்த நான் எனது நண்பனுடன் அங்கு சென்று சிறுமியை கற்பழிக்க முயன்றேன்.
அப்போது எனது நண்பன் அங்கிருந்து சென்று விட்டான். நான் மட்டும் சிறுமியை கற்பழித்து கொன்று விட்டு தீவைத்து எரித்தேன். பின்னர் தீ விபத்து ஏற்பட்டுவிட்டது என நாடகமாடினேன். எனினும் போலீசாரிடம் சிக்கி கொண்டேன் என வாக்கு மூலம் அளித்துள்ளான்.
இதையடுத்து சிறுவன் மாரிக்கண்ணனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 6 வயது சிறுமியை சிறுவன் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.