தூத்துக்குடி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக பலியானார். மேலும் ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேருக்கு நேர் மோதல்
தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடிக்கு வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார். அவர் சேதுபாதை ரோட்டில் கோமஸ்புரம் அருகே சென்ற போது, எதிரே இசக்கி என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து நேரிட்டது. இதில் மோட்டார் சக்கிள்களில் இருந்து ஜெயக்குமாரும், இசக்கியும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.
சாவு
இதில் பலத்த காயம் அடைந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சிறிது நேரத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் இசக்கி சாலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் இசக்கியை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.