தமிழக செய்திகள்

‘தமிழகத்தில் நீட் தேர்வு அவசியமானது தான்’ அர்ஜூன் சம்பத் பேட்டி

மருத்துவ கல்வியில் நடக்கும் வியாபார போக்குக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. எனவே தமிழகத்தில் நீட் தேர்வு அவசியமானது தான் என உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

இந்து தமிழர்களின் வாழ்வுரிமைகளை காத்திட வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில், அதன் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, இந்து கோவில்கள் இடிக்கப்படுவது, லாவண்யா விவகாரம், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற போர்வையில் கோவில்கள் தொடர்ந்து இடிக்கப்படுகிறது. நீர்நிலைகள், புறம்போக்கு இடங்களில் கோவில்கள் அமைந்துள்ளது என்று கூறி, 40 ஆண்டு காலம் பழமையான கோவில்களை பக்தர்களின் மனம் புண்படும்படி இடித்து கொண்டிருக்கிறார்கள். எனவே முதல்-அமைச்சர் தனது கவனத்தை இதன் பக்கம் திருப்பி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, கோவில்களை இடிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வு அவசியம்

தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனது ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த தேர்தலை செல்லாது என அறிவித்து, மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும். மேலும், மாணவி லாவண்யா விவகாரத்தில் முதல்-அமைச்சர் மவுனம் சாதிப்பது வேதனை அளிக்கிறது. ஹிஜாப்புக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். ஆனால் சிலர் வேண்டுமென்றே சதி திட்டம் தீட்டி, மதக்கலவரத்தை தூண்டுகின்றனர்.

மருத்துவ படிப்பில் நடக்கும் வியாபாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பலர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வு அவசியமானது தான். இந்த நீட் தேர்வு மூலம் சமூகநீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. ஆனால் நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை