சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'நீட்' தேர்வை ரத்து செய்ய முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்' என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கழித்து அதற்கு ஒரு குழுவை நியமித்து, அந்தக் குழு அறிக்கை அளிக்க ஒரு மாத கால அவகாசம் அளித்திருப்பது துரிதமான நடவடிக்கை அல்ல. மாறாக, காலந்தாழ்த்தும் செயல்.
12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வி சேர்க்கை அமைய வேண்டும் என்பதும், நீட்' உட்பட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பதும்தான் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு.
நீட் தேர்வினால் கிராமப்புற, நகர்ப்புற ஏழை-எளிய மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தமிழ் வழியில் கல்வி பயில்வோர் போன்ற சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சரே அறிவித்துவிட்டு, நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு அமைப்பது என்பது, அவருடைய அறிவிப்பில் அவருக்கே சந்தேகம் இருக்கிறதோ என்ற எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் எழுப்புகிறது.
2006-ம் ஆண்டிலேயே வல்லுனர் குழு இதுகுறித்து ஆராய்ந்து, அதன் அடிப்படையில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் குழு அமைப்பது என்பது அரைத்த மாவையே அரைப்பது' போலாகும்.
'கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?' என்பது போல நீட் ரத்துக்கு குழு எதற்கு?' என்பதுதான் எல்லோரின் கருத்தாக இருக்கிறது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததற்கு ஏற்ப முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நீட்' தேர்வு ரத்து குறித்த சட்டத்தை நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுமட்டுமல்லாமல், பிரதமரை நேரில் சந்திக்கும்போது இதுகுறித்து விரிவாக எடுத்துரைத்து, நீட்' தேர்வை அகில இந்திய அளவில் ரத்து செய்ய அழுத்தம் அளிக்குமாறும் முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.