தமிழக செய்திகள்

நெல்லை: வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய ரூ. 200 கோடி பதுக்கல்? - பரபரப்பு

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது

நெல்லை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரம், வாக்குசேகரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

அதேவேளை, தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் தமிழகம் முழுவதும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், 5 தொகுதிகளை கொண்ட நெல்லையிலும் தேர்தல் ஆணையம் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய நெல்லை பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ. 200 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வருமானவரித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அந்த தனியார் அடுக்குமாடி குடியிப்பில் குவிந்தனர். அதேநேரம் ரூ. 200 கோடி பணம் எங்கு உள்ளது? என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்காத சூழ்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிலும் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பாளையங்கோட்டையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.