தமிழக செய்திகள்

நெல்லையில் கத்திக்குத்தில் காயம்: பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு அமைச்சர், டி.ஜி.பி. நேரில் ஆறுதல்

கத்திக்குத்தில் காயம் அடைந்து நெல்லை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகையை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மார்க்ரெட் தெரசா (வயது 29). இவர் சுத்தமல்லி அருகே உள்ள பழவூரில் நடந்த கோவில் கொடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் திடீரென்று மார்க்ரெட் தெரசாவை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதை அறிந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக மார்க்ரெட் தெரசாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் அவருக்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகையும் அளிக்க உத்தரவிட்டார்.

அமைச்சர் வழங்கினார்

இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் நேற்று ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து மார்க்ரெட் தெரசாவை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர். பின்னர் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

இதுகுறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது

காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார். இது ஒரு விரும்பத்தகாத சம்பவம் ஆகும். எனினும் தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது.

தமிழகத்தில் பணிபுரிந்து வரும் போலீசாருக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க அரசு தயார் நிலையில் உள்ளது. போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க மன நல பயிற்சி வழங்குவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்