தமிழக செய்திகள்

கொளத்தூர் கபாலீசுவரர் கல்லூரிக்கு ரூ.31.45 கோடி செலவில் புதிய கட்டடங்கள் - மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கொளத்தூர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 765 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 31 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோவில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல் சமூக நோக்கோடு செயல்படும் அறநிலையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருக்கோவில்களின் சார்பில் 25 பள்ளிகளும், 10 கல்லூரிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 20,816 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில்கள் சார்பில் கொளத்தூர், திருச்செங்கோடு, விளாத்திக்குளம், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் 4 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. முதல்-அமைச்சர் 2.11.2021 அன்று சென்னை, கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கி வைத்ததோடு மட்டுமல்லாமல், அக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிலும் கல்விக் கட்டணமாக ரூ.10,000 மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை வழங்கி வருகின்றார். இக்கல்லூரியில் B.Com., BBA, BCA, B.Sc. Computer Science, B.A. (Saiva Siddhanta) ஆகிய பட்டப்படிப்புகளும், சைவ சித்தாந்தம் பட்டயப்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகின்றன. தற்போது இக்கல்லூரியில் 765 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

தற்போது வாடகை கட்டடத்தில் இயங்கிவரும் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு கொளத்தூர், பூம்புகார் நகரில் 5.96 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 31 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் புதிய கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு முதல்-அமைச்சரால் 23.12.2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

கொளத்தூர், அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டடங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சரால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. இப்புதிய கட்டடமானது தரை மற்றும் நான்கு தளங்களில் 25 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், கல்லூரி முதல்வர் அறை, பேராசிரியர்கள் அறை, அலுவலகம், கூட்டரங்கு, கருத்தரங்கு கூடங்கள், நூலகம், உணவகம், கழிப்பிட வசதிகள், வாகன நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போட்டித் தேர்வுகளுக்கு ஊக்கப்படுத்திடும் வகையிலும் அவர்களுக்கு தேவையான குறிப்புகளை பெற்றிடும் வகையிலும் நூல்கள் மற்றும் அதிவேக இணையதள வசதியுடன் கூடிய முதல்வரின் படைப்பகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொளத்தூர், அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற 516 மாணவ, மாணவியர் வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.