தமிழக செய்திகள்

புத்தாண்டில் புதுவிடியல் நிச்சயம் - தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மடல்

புத்தாண்டில் புதுவிடியல் நிச்சயம் - தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

"நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் தொண்டர்களுக்கு, மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளுடன் உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

இதோ… வெற்றிப் புத்தாண்டு விடிந்திருக்கிறது. இருள் அகற்றும் இன்பக் கதிரொளியாக எழுந்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும், அந்த ஆண்டுக்கென தனிச்சிறப்பு என்று ஒன்றுண்டு. நம்மைப் பொறுத்தவரை, நற்றமிழ் நாட்டைப் பொறுத்தவரை, இது உதயசூரியனுக்கு உரிமை உள்ள ஆண்டு. எங்கெல்லாம் தமிழர்கள் உள்ளனரோ, அங்கெல்லாம் அனைத்துத் தமிழர்க்கும், நம்பிக்கை ஒளியைத் தரக்கூடிய வெற்றிகரமான ஆண்டு இது.

தமிழகத்தை அலைக்கழித்த பத்தாண்டுகால அலங்கோல ஆட்சியின் தடித்த இருட்டை எப்படியாவது பாதுகாத்து, மேலும் எடுத்துச் செல்ல வேண்டும் என, பல பிற்போக்கு சக்திகள் இறங்கியுள்ளன. மக்களின் நலன் காக்கும் சின்ன ஒளிக்கீற்று தென்பட்டாலும், அதனை ஊதி அணைப்பதற்கு, அதிகாரத்தின் அத்தனை வாய்களும் சூழ்ச்சி வியூகம் வகுத்துக் காத்திருக்கின்றன. இவற்றுக்கு நடுவேதான், ஒளியேற்றும் பணியை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

ஊழலில் முதலிடம், கொள்ளையில் முதலிடம், கஜானாவை காலி செய்வதில் முதலிடம் என எல்லாவகையிலும் மக்களை வஞ்சிப்பதில் முதலிடம் பிடித்துள்ள அதிமுக ஆட்சியில், ஊழல் அமைச்சர்களில் யாருக்கு முதலிடம் என்பதில் அத்தனை பேருமே முதல்வருடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்திடவும், மக்கள் விரோதிகளான இந்த அமைச்சர்களை தேர்தல் களத்தில் மக்களே தண்டித்துப் படுதோல்வி அடையச் செய்யும் வகையிலும் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் எழுச்சியுடன் தொடர்கின்றன.

இருண்ட தமிழகத்திற்கு மீண்டும் வெளிச்சம் கொண்டுவர திமுகவினால் முடியும் என்பதை மக்கள் உறுதியுடன் நம்புகிறார்கள். வெளிச்ச விளக்குகளை ஊதி அணைத்துவிடலாம் என அதிகாரத்தில் இருப்பவர்கள் கைகோர்த்துச் செயல்படுகிறார்கள். அது அவர்களால் முடியவே முடியாது. ஏனென்றால், உதயசூரியன் என்ற உலகின் ஒளிவிளக்கை எவராலும் ஊதி அணைத்துவிட முடியாது.

புத்தாண்டில் புது விடியல் நிச்சயம். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்கிற இலக்கை நாம் அடைந்தே தீருவோம்! நமது உழைப்பால், ஒற்றுமையால், தோழமைக் கட்சிகளுடனான ஒருங்கிணைப்பால், இந்தப் புத்தாண்டு உதயசூரியன் ஆண்டாக மலர்ந்திடு'மே'!".

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை