தமிழக செய்திகள்

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தென்மேற்கு பருவ காற்று, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 2 முறை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

அதன்படி, நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இன்றும், நாளையும் மழை

இதுதவிர தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (சனிக்கிழமை) வடமாவட்டங்கள், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் நாளை மறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (திங்கட்கிழமை) உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் நாளை முதல் 11-ந்தேதி வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், திருச்சி 9 செ.மீ., தேவாலா, பந்தலூர் தலா 8 செ.மீ., திருச்சி சந்திப்பு 6 செ.மீ., ஹாரிசன் எஸ்டேட் 5 செ.மீ., சோலையாறு, டி.ஜி.பி. அலுவலகம், பாலவிடுதி, திருவாடானை தலா 4 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்து இருக்கிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்