தமிழக செய்திகள்

புதிய மாவட்டங்கள் அறிவிப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

செங்கல்பட்டு மற்றும் தென்காசி புதிய மாவட்டங்கள் அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும், நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டமும் புதிதாக அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது. புதிய மாவட்டங்களை உருவாக்க ஆணையிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.

தமிழகத்தில் மிக அதிகமாக 13 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மாவட்டம் வேலூர் தான். அந்த மாவட்டம் வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட வேண்டும். 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் தமிழகத்தின் பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெரிய மாவட்டங்களை பிரித்து சிறிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களை மறுவரையறை செய்து 12 லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு மாவட்டம் வீதம் மொத்தம் 60 மாவட்டங்களை உருவாக்க வேண்டும். இதற்காக தமிழ்நாடு மாவட்டங்கள் மறுவரையறை ஆணையத்தை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்காசி சட்டமன்ற தொகுதியில் உள்ள தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் அமைத்திட வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும், தென்காசி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலங்களிலும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் கடிதங்கள் வாயிலாகவும், தொடர் அறிக்கை வாயிலாகவும், கட்சி கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் பல முறை வலியுறுத்தியுள்ளேன்.

தற்போது நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தென்காசியின் முன்னாள் எம்.எல்.ஏ. என்ற முறையில், தென்காசியின் எதிர்கால வளர்ச்சியை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோரும் புதிய மாவட்டங்கள் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்